சன் தொலைகாட்சியில் 'குட்டிஸ் சுட்டிஸ் ' என்ற நிகழ்ச்சியில் ஒரு பெண் குழந்தை தன் தாயும் தந்தையும் வீட்டில் சண்டையிடுவார்கள் என்று கூற சிரிப்பும் கை தட்டல்களும் எழுகின்றது மேலும் அந்த குழந்தை தந்தை பெல்டை உபயோகிப்பார் என்கிறது அதற்கும் சிரிப்பு தன் தாய் தந்தையின் கழுத்தை பிடிப்பாள் என்கிறது அரங்கமே அதிர்கிறது தாய் உட்பட, மேலும் ஒரு படி சென்று அக்குழந்தை சண்டை முடிந்த பின் அதன் தந்தை வேறு வீட்டிற்கு சென்று விடுவார் என்கிறது மழழை குரலில் இதன் வலி அந்த குழந்தைக்கு தெரியாது அவள் தாய் அறிவாள் நிகழ்ச்சி தொகுப்பாளர் இவ்வளவு விடையையும் குழந்தை மூலம் கொணர்ந்து சிரிக்கிறார், தாய் வலிய சிரிக்கிறாள் . இவை சிரிப்பதற்குரிய விஷயமா? மிகவும் வருந்ததக்கது இந்த சமுகத்தின் நிலை... இம்மாதிரியான நிகழ்சிகளின் அவசியம் என்ன? படத்தொகுப்பாளனுக்கோ நிகழ்ச்சி தொகுத்தவனுக்கோ இந்நிகழ்ச்சி சமூகத்தில் உண்டாக்கும் பாதிப்பு விளங்கவில்லையா? இல்லை எனக்கென்ன என்ற மெத்தனமா? இல்லை முதிர்வின்மையா? எனக்கு விளங்கவில்லை?
இந்நிகழ்ச்சியில் பெரும்பாலும் அண்ணாச்சி கேட்கும் கேள்வி குடும்ப சூழலை மையமாக்கி தான் பெற்றவர்களிடையே சண்டை உண்டா? உட்பட. அண்ணாச்சி அவர்களே வீட்டுச் சண்டை பற்றி நகைப்பதுக்கு என்ன இருக்கிறது? இது அறிந்தும் அறிவிலிகள் குழந்தையை அழைத்துக் கொண்டு வந்துவிடுகிறார்கள் இந்நிகழ்ச்சி சிறுவர்களுக்காக அல்ல, 'A' சான்றிதழ் வழங்க வேண்டிய ஆபத்தான ஆபாசமான நிகழ்ச்சி?
இந்நிகழ்ச்சி நம் கல்வி அமைப்பின் அவல நிலையை எடுத்துரைக்கிறது, கல்வி அறிவு முதிர்ச்சிக்கு வித்திடவில்லை என்பதை அப்பட்டமாக முகத்தில் அறைகிறது இருந்தும் இதை சீரமைக்க வேண்டி எங்கும் எந்த குரலும் ஒலிக்கவில்லை.
வன்முறை சினிமாவில் வருவதை விட தினமும் வீடுகளில் அரங்கேறுகிறது இதன் பாதிப்பு வளரும் சிறுவர்களின் மனதில் ஏற்படுத்தும் பாதிப்பை பற்றி பெற்றவர்களுக்கு அக்கறை இல்லை. நாளை அந்த சிறுமி வளர்ந்து எவ்வித வன்முறையை கையாலுவாள் என்று எண்ணி பார்க்க பயமாக இருக்கிறது.
சமுகத்தில் வன்முறையை தடுப்பது அரசின் கடமை என்கிற வர்க்கத்தினர் குடும்ப சூழலில் உருவாகும் வன்முறையாளர்களை கட்டு படுத்தும் பொறுப்பும் அரசுக்கா என்பதை விவாதிப்பது நலம். குழந்தை படிப்பில் சிறந்து விளங்கினால் மட்டும் போதுமா? ஒழுக்கம் கட்டுப்பாடு பிறரை மதிக்கும் பழக்கம் இல்லாத மனிதன் சமுகத்தின் வீழ்ச்சிக்கு விதையாகிறான். நாகரிக வளர்ச்சி நகரமயமாக்கல் மனிதனை மீண்டும் மிருகமாக்கிறது என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை
பெற்றோர்களே உங்கள் முதிர்வின்மையால் நீங்கள் விதைப்பது முதிர்வற்ற வன்முறையான எதிர்காலம், நீங்கள் விதைப்பது நீங்கள் தான் அருக்கப்போகிரீர்கள். வீட்டில் தாய் தந்தை நடந்து கொள்ளும் முறையை பார்த்து தான் குழந்தைகள் வளர்கிறார்கள் நீங்கள் ஒருவருக்கு ஒருவர் கொடுத்து கொள்ளும் மரியாதையை தான் நாளை உங்கள் குழந்தைகள் உங்களுக்கு அளிப்பார்கள். உங்கள் குழந்தையின் நடத்தை சுற்றத்தையும் பாதிக்கும் என்பதை மறவாதீர்கள்
ஒரு திரைப்படம் வெளியாவதால் சமுகத்தின் ஒருமைப்பாடு சீர்குலையும் ஒரு சமூகத்தினரின் உணர்வுகள் பாதிப்புகளுக்குள்ளாகும் என்று போர் கோடி தூக்கிய சமுக ஆர்வலர்களே எங்கே சென்றீர்கள் தணிக்கை இன்றி ஒளிபரப்பாகும் இம்மாதிரியான நிகழ்ச்சிகளின் ஒளிப்பரப்பின் போது. நாளுக்கு நாள் வீட்டுக்கு வீடு வன்முறை வளர வித்திடும் இது போன்ற நிகழ்ச்சிகள் தடை செய்ய வேண்டாமா ? தொலைக்காட்சி தொடர் என்ற பெயரில் கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறை பற்றி யார் விவாதிக்க? தன குடும்பம் தன மக்கள் என்று வாழ நாம் ஒன்றும் தனி தனி தீவில் வாழவில்லை சமூகம் என்ற கூட்டுக்குடும்பத்தில் வாழ்கிறோம். சிந்தித்து தீர்வு காண வேண்டிய ஒரு பிரச்சனை கேட்பாரற்று கிடக்கிறது?
என்று விடியுமோ?
தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் தணிக்கைக்கு உள்ளாவது தங்கள் கருத்துச் சுதந்திரத்தை பாதிக்கும் என்று கூக்குரல் எழுப்பும் தொலைக்காட்சி நிருவனர்களே உங்கள் சுதந்திரம் எம்சமூகத்தை சீர்குலைக்கிறது இதற்க்கு நாங்கள் என்ன செய்வது?
தொலைக்காட்சிகளும் தணிக்கைக்கு உட்படுத்த வேண்டும் இல்லையேல் சமுகத்தின் அடிப்படை சீர்குலைந்து விடும்.